பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் கோவை வனக்கோட்டம், சிறுமுகை சமூக காடுகள் சரகம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.தமிழக வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் நிழல் தரக்கூடிய மரங்கள், பழ வகை மரங்கள் மற்றும் தடிமர வகை நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் வனத்துறை சார்பில் நாற்றங்காலில் இருந்து இம்மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இங்கு மகாகனி, செண்பகம், புங்கன், கொடுக்காப்புளி, குமிழ், பெருநெல்லி, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, இயல் வாகை, வேம்பு, மந்தாரை, சரக்கொன்றை, மகிழம், வேங்கை, இலுப்பை, நாவல், பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.