கோவை;இனி, குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காமல், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், திறந்தவெளியில் கொட்டினால், உங்கள் வீட்டுக்கு கோவை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வரும். அதன் பிறகும் அலட்சியமாக இருந்தால், அபராதம் விதிக்கப்படும்.கோவை நகர் பகுதியில் தினமும், 1,250 டன் வரை குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை, இறைச்சி கழிவு, மருத்துவ கழிவு என, அனைத்து கழிவுகளையும் ஒன்றாக கலந்து கொட்டுவதால், மேலாண்மை செய்ய முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் தவிக்கிறது. இதற்கு தீர்வு காண களமிறங்கியுள்ள, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு 'ரூட் சார்ட்' வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அதன் வழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். க ண்காணிக்க ஒருவர்
இவ்வாகனத்துடன் கூடு தலாக ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தரம் பிரித்து குப்பை சேகரிக் கப்படுகிறதா என கண்காணிக்கிறார்; அவ்வாகனம் செல்லும் வழித்தடத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்பட்டு இருந்தால், அங்குள்ள 'சிசி டிவி' கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு, யார் யாரெல்லாம் கொட்டுகிறார்கள் என கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. பின், அதை நகலெடுத்து, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.அதில், 'உங்களது வீதிக்கு இத்தனை மணிக்கு மாநகராட்சி வாகனம் குப்பை சேகரிக்க வந்தது; நீங்கள் குப்பையை தரம் பிரித்து கொடுக்கவில்லை. மாறாக, இத்தனை மணிக்கு திறந்தவெளியில் குப்பையை கொட்டியிருக்கிறீர்கள். இது தவறு. வரும் நாட்களில், தரம் பிரித்துக் கொடுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையெனில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அலுவலர்கள் நியமனம்
இப்பணிகள், ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இதற்காக, 25 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலாண்மைக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினருக்கு மைக் வழங்கப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பகுதியில் குப்பை தேங்கியிருக்கும் தகவல் கிடைத்தால், மைக்கில் கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறார். முன்னேற்றம்
கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியால், தரம் பிரித்து சேகரிக்கும் குப்பை அளவு, 120 டன்னில் இருந்து, 290 டன்னாக அதிகரித்திருக்கிறது. இனி, குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காமல், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், திறந்தவெளியில் கொட்டினால், மாநகராட்சியில் இருந்து வீடு தேடி நோட்டீஸ் வரும். அதை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி சார்பில் சொந்தமாக 'சிசி டிவி' கேமரா கொள்முதல் செய்து, திறந்தவெளியில் கொட்டும் இடங்களில் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குப்பை மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். திறந்தவெளியில் கொட்டுவது, தேங்குவது தவிர்க்கப்பட்டு வருகிறது. தரம் பிரித்து சேகரிக்கும் பணி முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ரூ.60 கோடியில் மக்கும் குப்பையில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருக்கிறது. ஆறு முதல் ஏழு மாதத்துக்குள் கட்டுமான பணி முடிக்கப்படும்,'' என்றார்.