| ADDED : டிச 03, 2025 07:21 AM
கோவை: ஆன்லைன் வழியாக கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து, விற்பனை செய்பவர்களையும் உணவு பாதுகாப்புத்துறையினர்(எப்.எஸ்.எஸ்.ஏ. ஐ.,) கண்காணித்து வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை பதிவு இன்றி, விற்பனை வீடுகளில் வைத்து மேற்கொண்டாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: பெண்கள் பலர் வீடுகளிலேயே, கேக் போன்ற உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பலர், உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். ஆய்வு மேற்கொள்ளும் போது, உரிய விதிமுறைகள் பின்பற்றாவிடில், நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கேக் போன்றவற்றை, 3 நாட்களுக்கு மேல் வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைத்தாலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்து, திறந்து எடுத்து பயன்படுத்துவதால், 'புட் பாய்சன்' ஏற்பட வாய்ப்பு உண்டு. கேக் பேக்கிங் இன்றி, தனியாக வாங்கும் போது அதன் தயாரிப்பு, காலாவதி குறித்த கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கூறினார்.