கோவை: பீளமேட்டை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், காந்திபார்க் பகுதியில் நின்று கொண்டிருந்தார். நான்கு பேர் கொண்ட கும்பல், பெண் ஆசை காட்டி அங்குள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஒரு பெண்ணுடன் சேர்த்து, அந்த நபரை மொபைல் போனில் போட்டோ எடுத்தனர். பின்னர் அழகிகளுடன் தொடர்பு இருப்பதாக, அந்த போட்டோவை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். போட்டோவை அனுப்பாமல் இருக்க, பணம் கேட்டுள்ளனர். பின்னர் 'ஜிபே' வாயிலாக, 1.30 லட்சம் ரூபாய், இரண்டு மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டை பறித்து சென்றனர். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, ஜிபேயில் பணம் அனுப்பிய மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரித்தனர். விசாரணையில், திண்டுக்கல், வேடசந்துாரை சேர்ந்த கண்ணப்பன்,55, நாமக்கல்லை சேர்ந்த பிரசன்னா,25, தேனியை சேர்ந்த ஸ்ரீ லட்சுமணன்,40, வால்பாறையை சேர்ந்த லாவண்யா,32, ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. நான்கு பேரையும் நேற்று, கைது செய்து சிறையிலடைத்தனர்.