உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோ பேக் ஸ்டாலின்! கோஷத்துடன் பா.ஜ. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

 கோ பேக் ஸ்டாலின்! கோஷத்துடன் பா.ஜ. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக, பா.ஜ. வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வாரம், இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைக்க, பிரதமர் மோடி கோவை வந்தார். அவருக்கு த.பெ.தி.க.வும் வேறு சில தி.மு.க. ஆதரவு அமைப்பினரும் கருப்புக்கொடி காட்டினர். அதற்கு முன் பேட்டி அளித்த பா.ஜ. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ''பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோரை, தமிழக அரசு ஊக்குவிக்கக்கூடாது. முன்னதாககைது செய்ய வேண்டும். இல்லை என்றால், முதல்வர் வரும்போது பா.ஜ.வினர் கருப்பு கொடி காட்டுவார்கள்,'' என்று கூறியிருந்தார். அதன்படி, நேற்று பா.ஜ. இளைஞரணி தலைவர் முத்து அபிஷேக் தலைமையில், மாநில துணை தலைவர் கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோர் சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகில், ”கோ பேக் ஸ்டாலின்!” என கோஷமிட்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது முத்து அபிஷேக் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் கோவையிலுள்ள 10 ல் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. ஓட்டு போடாத மக்களுக்கு மெட்ரோ ரயில் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில்,மெட்ரோ திட்ட அறிக்கையை அரைகுறையாக தயாரித்து சமர்பித்துள்ளனர். ஆனால், மத்திய அரசு மீது பழி போடுகின்றனர். கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நீடிக்கிறது. மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் விற்பது தெரிந்தும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் வருகையின் போது தி.மு.க. ஆதரவு கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர்; அதற்கு பதிலடியாக நாங்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்நடத்தினோம். இவ்வாறு அபிஷேக் கூறினார். 'கோ பேக் ஸ்டாலின்' போஸ்டர் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று, 'கோ பேக் ஸ்டாலின்' என்ற வாசகம் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. போஸ்டரின் கீழ் பகுதியில், கோவை தெற்கு தொகுதி என்று குறிப்பிட்டிருந்தது. பல இடங்களில் போஸ்டர்களை போலீசார் கிழித்து எறிந்தனர். அவர்கள் சென்றதும் பா.ஜ.வினர் வந்து மீண்டும் ஒட்டிக்கொண்டே இருந்தனர். சமூக வலைதளங்களிலும் அதை பதிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை