உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீன் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க அரசாணை வெளியீடு

மீன் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க அரசாணை வெளியீடு

கோவை; உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, பல்வேறு நிபந்தனைகள் விதித்து, தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்திருக்கிறது.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், உக்கடம் சி.எம்.சி., காலனியில் குடும்பத்துடன் வசித்தனர். உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்துக்கு தேவையான நிலத்தை, வருவாய்த்துறையினர் கையகப்படுத்திக் கொடுக்காததால், துாய்மை பணியாளர்களின் வீடுகளை இடித்து விட்டு, இறங்கு தளம் கட்டும் வகையில் 'டிசைன்' மாற்றப்பட்டது.அதற்கு தொழிலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக உறுதியளிக்கப்பட்டது. அதற்கு, சில்லரை மீன் மார்க்கெட் வளாகத்தை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மீன் மார்க்கெட் வளாகத்தில், 72 கடைகள் உள்ளன. இக்கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு, உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில், நில வாடகை அடிப்படையில் மாற்று இடம் வழங்கப்பட்டது; அங்கு, மீன் வியாபாரிகள் இணைந்து புதிய மார்க்கெட் கட்டியிருக்கின்றனர்.அதேநேரம், 'வாடகை நிலுவை இல்லை என மாநகராட்சியில் சான்று பெற்றால் மட்டுமே கடை ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, நிபந்தனை விதிக்கப்பட்டது. ஏனெனில், மீன் வியாபாரிகள், ரூ.3.5 கோடி வரை வாடகை நிலுவை வைத்திருப்பதாக, மாநகராட்சி பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மாநகராட்சி தரப்பில் சான்று வழங்காததால், புதிய மார்க்கெட்டை திறப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. மீன் வியாபாரிகள் தரப்பில், பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்ததால், இப்பிரச்னை, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக, பல்வேறு நிபந்தனைகள் விதித்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ