ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர், ஜே.இ.இ., முதன்மை தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில், இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ., முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு கட்டங்களாக நுழைவு தேர்வுகளை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.2025--2026 ஆண்டிற்கான முதன்மை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவு வெளியிடப்பட்டது. இதில் கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமித் என்ற 12ம் வகுப்பு மாணவர் தேர்வு எழுதி வெற்றி பெற்று, வரும் மே 18 ம் தேதி நடைபெறவுள்ள பிரதான தேர்விற்கு தகுதி பெற்றுள்ளார்.இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஐ.டி.,போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடிஸ் குலசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டினார்கள்.----