பொள்ளாச்சி:அரசு பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும்'வாட்ஸ்ஆப்'குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வாயிலாக பள்ளி திறப்பு விபரம் தெரிவிக்கப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம், தனித்திறன், சுய ஒழுக்கம் என, மாணவர்களின் குறிப்பிட்ட சில விபரங்களை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், தலைமையாசிரியரும், மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய 'வாட்ஸ்ஆப்' குழுவை உருவாக்கியுள்ளனர். இதன் வாயிலாக, பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முறையாக கவனிக்கின்றனர். அதன்படி,தற்போது, பள்ளி திறப்பு குறித்த விபரம்'வாட்ஸ்ஆப்'வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:கோடை விடுமுறை முடிந்து, வரும், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த விபரம், அந்தந்த வகுப்பு ஆசிரியர் 'அட்மின்' ஆக உள்ள'வாட்ஸ்ஆப்'குழுவில் பகிரப்படும். இதன் வாயிலாக மாணவர்கள், பள்ளிக்கு வரவழைக்கப்படுவர். ஏற்கனவே, பெரும்பாலான அரசு பள்ளிகளில்,'வாட்ஸ்ஆப்'குழு வாயிலாக மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்தல், தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.இது ஒருபுறமிருக்க, பள்ளிக்கு மாணவர் வரவில்லை என்றாலோ, வகுப்பைப் புறக்கணித்து பள்ளியை விட்டுச் சென்றாலோ, அந்த விபரம் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.இதனால், பள்ளியில், மாணவர்கள் முறைகேடாக நடந்து கொள்வதும் குறைந்துள்ளது. வாட்ஸ்ஆப் குழு உருவாக்கம் ஏற்கனவே பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் 'வாட்ஸ்ஆப்'குழுக்கள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகின்றன. அரசு பள்ளிகளிலும், தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளை போன்று தகவல் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.
'ஸ்மார்ட் போன்' இல்லாத பெற்றோருக்கும் தகவல்!
அரசு பள்ளிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே பெரும்பாலும் கல்வி பயின்று வருகின்றனர். அம்மாணவர்களின் பெற்றோர்களிடம், 'ஸ்மார்ட் மொபைல்போன்' இருப்பதில்லை.மேலும், சிலருக்கு, எழுதவும் படிக்கவும் தெரியாது. இதனால்,'வாட்ஸ்ஆப்'வாயிலாகஅவர்களின் குழந்தைகள் மற்றும் பள்ளி சார்ந்த விபரங்களைக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.இதற்கு, ஒவ்வொரு வகுப்பிலும் 'வாட்ஸ்ஆப்'குழு உருவாக்கினாலும், 'ஸ்மார்ட்' மொபைல்போன் இல்லாத மாணவர்களின் பெற்றோர்களிடம் விபரம் தெரிவிக்க, அருகிலுள்ள சக மாணவர்கள் வாயிலாக தகவல்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டும் வருகிறது, என, பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.