நடப்பாண்டில் 172 பேர் மீது குண்டாஸ் குற்றங்கள் குறைந்து விட்டதாம்
கோவை: நடப்பாண்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, 172 பேர் மீது, குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாநகரில் போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி' என, நான்கு பிரிவுகளாக ரவுடிகள் பிரிக்கப்படுகின்றனர். 'ஏ பிளஸ்' பிரிவில், 13, 'ஏ' பிரிவில், 19, 'பி' பிரிவில், 209, 'சி' பிரிவில், 478 என, மொத்தம், 719 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை காரணமாக, தற்போது குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறுகின்றனர் போலீசார். போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: மாநகரில் கடந்த ஜன., முதல் கடந்த மாதம் வரையிலான, 10 மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 54, திருட்டு வழக்கில், 16, சட்டம் - ஒழுங்கு பாதிக்க காரணமானவர்கள் மற்றும் ரவுடிகள் என, 69, பாலியல் குற்றவாளிகள், 26, சைபர் கிரைம் குற்றவாளிகள், 7 என, மொத்தம், 172 பேர் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், மாநகரில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மாநகரில் கடந்தாண்டு 'கிரேவ் கிரைம்ஸ்'(மோசமான குற்றங்கள்) குற்றங்கள் குறித்து, 86 வழக்குகள், இதர குற்றங்கள் குறித்து, 1,132 வழக்குகளும் பதிவாகியிருந்தன. நடப்பாண்டு இவை முறையே, 54 மற்றும் இதர குற்றங்கள், 642 என்ற நிலையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
155 ரவுடிகள் வெளியேற்றம்
கோவையில், 51 'ஏ' சட்டப்பிரிவின் கீழ், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள், ரவுடிகள் ஆறு மாதங்களுக்கு ஊரை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். கடந்த, 10 மாதங்களில், 155 பேர் அவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீண்டும் திரும்ப வந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அவர்களிடம் பிணைப் பத்திரம் பெறப்படுகிறது.