உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புயலுக்கு முன் தேங்காய், இளநீர் அறுவடை மரங்கள் வேரோடு விழுவதை தவிர்க்கலாம்

புயலுக்கு முன் தேங்காய், இளநீர் அறுவடை மரங்கள் வேரோடு விழுவதை தவிர்க்கலாம்

மேட்டுப்பாளையம்: புயலுக்கு முன் தேங்காய், இளநீரை, அறுவடை செய்தால், மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம் என கோவை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சித்தார்தன் கூறினார். மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழைக்கு அடுத்து தென்னை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. தென்ணை மரங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சித்தார்தன் கூறியதாவது:- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளான கனமழை, புயல் ஆகியவற்றால் தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மேலாண்மை நடவடிக்கைகள் பின்வருமாறு. அதிவேக புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில், புயலுக்கு முன் தேங்காய், இளநீரை, அறுவடை செய்தல் வாயிலாக மரத்தின் பாரத்தினை குறைத்து மரங்கள் வேரோடு விழுவதைத் தவிர்க்கலாம். மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கனமான பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவது, மரத்தின் தலைப்பகுதியில் உள்ள சுமையை குறைத்து, மரம் முறிவதை தவிர்க்கும். மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைத்தல் முறை வாயிலாக வேர் பகுதியை பாதுகாத்திடலாம். மேலும் நீர் தேக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம். முறையான வடிகால் வசதியை ஏற்படுத்திட வேண்டும். ஆழமாக உழவு செய்தலை தவிர்க்க வேண்டும். ஆழமாக உழவு செய்வதால் வேர்கள் பாதித்து வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்படும். அதிக காற்று வீசும் நேரத்தில் விவசாயிகள் மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும். தற்காலிகமாக நீர் மற்றும் ரசாயன உரமிடுவதை தவிர்த்து இயற்கை உரங்களை இடலாம். ஈரப் பதத்தில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மரங்களுக்கு காப்பீடு செய்தல் மிக அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !