| ADDED : நவ 17, 2025 12:19 AM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடையில், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைதுறையினர் கோவில் நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாலையின் ஓரத்தில் ஒதுக்கு புறமாக உள்ள, இந்த கோவிலின் சுற்றுசுவரின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியை கோவில் நிர்வாகத்தினர் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, காரமடை பா.ஜ.,கவுன்சிலர் விக்னேஷ், அ.தி.மு.க., கவுன்சிலர் வனிதா, தி.மு.க., கவுன்சிலர் அனிதா, கோவில் அறங்காவலர் தர்மராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் மற்றும் பக்தர்கள் பலர் கோவிலில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, அறங்காவலர் தர்மராஜ் கூறுகையில், 'யாருக்கும் தொல்லையின்றி, மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை, தி.மு.க.,முக்கிய பிரமுகர் ஒருவர் தூண்டுதலின் பேரில், நெடுஞ்சாலை துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கலெக்டரிடம் முறையிட உள்ளோம். மேலும் காரமடை மக்களின் ஆதரவில் பந்த் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்,' என்றார்.