| ADDED : நவ 18, 2025 03:29 AM
மேட்டுப்பாளையம்: கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணைக்குள் அனுமதியில்லாததால் சாலையோரம் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலையில் கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு எலுமிச்சை, கொய்யா, மாதுளை, மிளகு கிராம்பு, ஜாதிக்காய் இலவங்கப்பட்டை, பாக்கு, பூச்செடிகள், அழகு செடிகள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தரமான நாற்றுக்கள் ரூ.10 முதல் 20 வரை உற்பத்தி விற்பனை செய்யப்படுகின்றன. இப்பண்ணை இயற்கை சூழலில் அமைந்துள்ளதால், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வந்தது. விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் என முக்கிய நாட்களில் இங்கு உள்ளூர் மக்கள் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனிடையே கல்லாறு பகுதி யானைகள் வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலிகள், குழந்தைகள் பார்க், போன்றவைகள் அகற்றப்பட்டன. பின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோட்டக்கலை துறை நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது முற்றிலுமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. விவசாயிகள் நாற்றுகளை வாங்குவதற்கு வசதியாக தோட்டக்கலை பண்ணையில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ள ஊட்டி சாலையில், கல்லாறு தோட்டக்கலை பண்ணைக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நாற்றுகளை வாங்கி கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்லாறு தோட்டக்கலை பண்ணைக்கு அனுமதி இல்லாத விவரம் அறியாத சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து ஏமாறுகின்றனர்.----