பனிப்பொழிவு அதிகரிப்பு முருங்கைக்காயை பாதித்தது
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் வரத்து இல்லாததால், மக்களின் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதமாக முருங்கைக்காய் வரத்து இல்லாததால், மார்க்கெட்டுக்கு வரும் மளிகை கடைக்காரர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.ஒரு மாதத்திற்கு முன், மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய், 210 ரூபாய்க்கு விற்றது. அதுவும் வெளியூர் வரத்து மட்டும் இருந்தது. தற்போது இந்த வரத்தும் இல்லை, என வியாபாரிகள் தெரிவித்தனர்.தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு மாத காலமாக பனிப்பொழிவு இருப்பதால் முருங்கை மரத்தில் இருக்கும் பூ உதிர்ந்து விடுகிறது. மேலும், காய்களில் பிசின் போன்று வடிந்து இருப்பதால், அவற்றை மார்க்கெட்டுக்கு யாரும் கொண்டு வருவதில்லை. இதனால், முருங்கைக்காய் வரத்து இல்லை.கிணத்துக்கடவு பகுதி மட்டுமின்றி, மாவட்டத்தின் பல இடங்களில் இந்த பிரச்னை உள்ளது. பனிகாலம் முடிந்த பிறகு, முருங்கைக்காய் வரத்து எதிர்பார்க்கலாம்,' என்றனர்.