ரோட்டோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, பயாஸ்கோப் ரோடு ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.பொள்ளாச்சி, பயாஸ்கோப் ரோட்டில், நகராட்சி வரி வசூல் மையம், நகராட்சி பள்ளி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அதனால், இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு, நான்கு ரோடு சந்திப்பு அருகே, ரோட்டின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.மேலும், இரவு நேரத்தில் இப்பகுதியில் கார் போன்ற வாகனங்கள் சென்று திரும்பும் போது, வாகனம் பள்ளத்தில் இறங்கி சிக்கிக்கொள்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சில நேரங்களில், வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி இந்த பள்ளத்தில் வாகனத்தை தவறுதலாக இயக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். நாளுக்கு நாள் இப்பகுதியில் விபத்து அதிகரித்து வருகிறது. வாரத்துக்கு குறைந்தது மூன்று வாகனங்களாவது பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன.எனவே, இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.