நர்ஸ் வேலைக்கு 18ல் நேர்காணல்: அழைக்கிறது கோவை மாநகராட்சி
கோவை: கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியாக உள்ள, நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு, தற்காலிக பணியாளர்கள் நியமிக்க, 18ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது.கோவை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் கீழ், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 54 நகர சுகாதார செவிலியர்கள் மற்றும், 10 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இக்காலியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்ப, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான நேர்காணல், மாநகராட்சி அலுவலகத்தில் வரும், 18ம் தேதி நடக்கிறது.நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர், 40 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும். செவிலியர் பணியிடங்களுக்கு, 35 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.இப்பணி தற்காலிகமானது; எந்தவொரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். கல்விச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், முன்அனுபவ பணி சான்று, இருப்பிட சான்று, திருமணச் சான்றிதழ் இருந்தால் கொண்டு வர வேண்டும்.ஆதார் அடையாள அட்டை மற்றும் கொரோனா பணிச்சான்று இருந்தால் கொண்டு வர வேண்டும். பணியில் இருந்து விலகும்பட்சத்தில், முறையான காரணங்கள் இல்லாத பட்சத்தில், மூன்று மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.அதற்கு ஒப்புதல் அளித்து, ரூ.20க்கான முத்திரைத்தாளில் எழுதித் தர வேண்டும் என, கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.