உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிதாப நிலையில் பாசன கால்வாய்கள்; பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பரிதாப நிலையில் பாசன கால்வாய்கள்; பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி ;ஆழியாறு பாசன கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டிக்காணப்படுகிறது. இவற்றை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பாசனத்துக்கு முழு அளவு தண்ணீர் கிடைக்கும்; தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்த முடியும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு பீடர் கால்வாய் ஆகிய பாசனப்பகுதிகளில், மொத்தம் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பாசனத்துக்கு கிடைக்கும் தண்ணீரை நம்பி, வேளாண்துறையின் பரிந்துரையின்படி, விவசாயிகள் தென்னை சாகுபடி செய்ய துவங்கினர்.ஆழியாறு முதன்மை ஊட்டுக்கால்வாய், 13.4 கி.மீ., கிளை கால்வாய், 62.9 கி.மீ., துாரம் உடையதாகும்.சேத்துமடை முதன்மை கால்வாய், 8.4 கி.மீ., கிளை கால்வாய், 25.89 கி.மீ., வேட்டைக்காரன்புதுார் முதன்மை கால்வாய், 17.4 கி.மீ., கிளை கால்வாய், 45 கி.மீ., பொள்ளாச்சி முதன்மை கால்வாய், 48 கி.மீ., கிளை கால்வாய், 112 கி.மீ., துாரம் கொண்டதாக உள்ளது.ஒவ்வொரு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, கிளை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது.

கால்வாய் சேதம்

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கால்வாய் முற்றிலும் சேதமடைந்து, முட்செடிகளின் கூடாரமாக மாறி வருகிறது.கால்வாய் உள்ள பகுதியே தேடும் நிலையிலேயே உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை.கால்வாயையொட்டி குப்பை கழிவுகள், பழைய பொருட்கள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட குப்பை கொட்டப்படுகின்றன. கால்வாய் தண்ணீர் வராத காலங்களில், அவை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.வீசப்படும் கழிவுகளால், கால்வாய்கள் சுகாதாரமின்றி காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. பாலித்தீன் உள்ளிட்ட கழிவுகளால், விவசாய நிலங்களில், மண்வளம் பாதிக்கும் சூழல் உள்ளது.

அறிவிப்பு பலகை

பிரதான மற்றும் கிளை கால்வாய்கள் அருகே பொதுப்பணித்துறை சார்பில், பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில், மதகு எண், மொத்த பாசனம், மதகுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டன.ஆனால், தற்போது அந்த பலகையில், விபரங்கள் குறிப்பிட்டவை அழிந்து போய் உள்ளதால், அவை எந்த கால்வாய் போன்றவை தெரிவதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும், சில இடங்களில், இந்த அறிவிப்பு பலகைகளில், போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன. இதனால், இவை பயன்பாடில்லாமல், காட்சிப்பொருளாக மாறி வருகிறது.

அரசு கவனம் செலுத்தணும்

விவசாயிகள் கூறியதாவது: ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. புளியங்கண்டியில் துவங்கி, பல இடங்களில் கால்வாய்கள் கழிவுநீர் ஓடும் இடமாகவும், புதர் மண்டியும் காணப்படுகிறது.கால்வாய் ஓரங்களில், வளரும் செடிகளை அகற்றினாலும் கட்டைகளை அகற்றுவதில்லை. இதனால் அவை மீண்டும் வளர்ந்து, கால்வாய் கரைகளை பதம் பார்ப்பதால் சேதமடைகின்றன. கடந்த, இரண்டு ஆண்டுகளாக இதே நிலை தான் நீடிக்கிறது.இதுபோன்ற பிரச்னைகளால், முழு அளவில் பாசனத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், கால்வாயை பராமரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தால், நிதியில்லை என காரணம் கூறுகின்றனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளதால், தண்ணீர் திருட்டிற்கு குழாய்கள் அமைத்து திருடவும் வாய்ப்புள்ளது. எனவே, பிரதான கால்வாயை பராமரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன், பிரதான கால்வாய்கைள பராமரிக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை