| ADDED : ஜன 26, 2024 11:16 PM
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் நித்யா தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.பொதுமக்கள் பேசுகையில், 'மத்திய அரசின் சார்பில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 22 மேல்நிலை தொட்டிகள், 3,000ம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள், அதற்கு குழாய்கள் பதிக்க வீடு ஒன்றுக்கு ரூ.4,500 என பணிகள் ஒதுக்கப்பட்டன. பணிகள் இன்னமும் 100 சதவீதம் முடிவடையவில்லை. ஆனால் முடிவடைந்துள்ளது என ஊராட்சி நிர்வாகம் சொல்கிறது. ஒப்பந்ததாரர்கள், இலவசமாக வீடுகளுக்கு இணைப்பு குழாய் வழங்காமல், மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.ஜல் ஜீவன் திட்டத்தில் தவறு நடந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தினர் பேசுகையில், 'ஜல் ஜீவன் திட்டத்தின் இப்பணி, ஊராட்சியால் செயல்படுத்தப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் ஊராட்சியால் முடிவு செய்யப்படவில்லை. மக்களின் புகார் தொடர்பாக விசாரித்து, அறிக்கை தயார் செய்து உயரதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.