உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிட்டிங் துணி இறக்குமதி சரிவு: ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி

நிட்டிங் துணி இறக்குமதி சரிவு: ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி

கோவை; மத்திய அரசின் நடவடிக்கையால், சீனாவில் இருந்து சாயமிடப்பட்ட நிட்டிங் துணிகள் இறக்குமதி சரிந்து வருவதால், உள்நாட்டு ஜவுளித் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சீனாவில், உள்நாட்டு விற்பனை தேக்கமடைந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக சீனா, ஜவுளிப் பொருட்களை உலகம் முழுதும், மிகக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தது.இதனால், இந்திய ஜவுளித் தொழில், குறிப்பாக, தமிழக ஜவுளி உற்பத்தித் துறை வெகுவாக பாதித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாயமிடப்பட்ட நிட்டிங் துணிகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், உள்நாட்டு நூற்பாலைகள், நிட்டிங் ஆலைகள் மற்றும் சாய ஆலைகள் நேரடியாக பாதிப்பைச் சந்தித்தன.மிக அதிக அளவில் சிந்தெடிக் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டதால், பருத்தி சார்ந்த ஜவுளித் தொழிலும் பாதிக்கப்பட்டது.ஹெச்.எஸ்.என்., 6002 முதல், 60056 வரையிலான துணி ரகங்கள் கடந்த செப்., வரையிலான அரையாண்டில், ரூ.2,750 கோடி மதிப்பில் இறக்குமதி ஆகின.ஜவுளித் துறையினர் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, கடந்த மார்ச்சில், 5 ஹெச்.எஸ்., குறியீடுகள் கொண்ட துணி ரகங்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயித்தது. இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட அந்த ஜவுளி ரகங்களின் இறக்குமதி தற்போது 43 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:சீனா, சாயமிடப்பட்ட துணிகளை மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 4,500 கோடி டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.இந்தியா போன்ற பெரிய உள்நாட்டு சந்தை உள்ள நாடுகள், மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. மத்திய அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து, கடந்த மார்ச்சில் 5 ஹெச்.எஸ்.என் ஜவுளி ரகங்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், சாயமிடப்பட்ட துணிகளின் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது.இந்தியாவில் இந்த இறக்குமதி 50 சதவீதம் குறைந்தால், நூற்பாலைகள், குறு, சிறு நிட்டிங் ஆலைகள் மற்றும் சாய ஆலைகளுக்கு, வரும் ஆண்டில் ரூ.3,000 கோடிக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்; உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். குறிப்பாக ஹொசைரி நூற்பாலைகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். வங்கதேசத்துக்கு ஹொசைரி நூல் ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த செப்.,ல் வங்கதேசம் இந்தியாவில் இருந்து 4.5 கோடி கிலோ நூலை இறக்குமதி செய்துள்ளது.இந்த இரு மாற்றங்களும் தற்போது சிரமத்தில் இருக்கும் நூற்பாலைத் துறைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ