வரகளியாறுக்கு கும்கி யானைகள் மாற்றம்
வால்பாறை; வரகளியாற்றில் பராமரிக்கப்பட்டு வந்த நான்கு கும்கி யானைகள், சுழற்சி முறையில் வால்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகளியாற்றில், வனத்துறை சார்பில், 25 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரகளியாறு முகாமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வறட்சி நிலவியதால், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த ஐந்து கும்கி யானைகள் வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, ஜூன் மாதம் வரை பராமரிக்கப்பட்டன.அதன்பின், தென்மேற்குப்பருவ மழை பெய்ய துவங்கியதையடுத்து, ஜூலை மாதம், 10ம் தேதி யானைகள் மீண்டும் வரகளியாறுக்கு அழைத்து செல்லப்பட்டன. இந்நிலையில், வரகளியாறு யானைகள் முகாமில், பாகன்களின் குடியிருப்பு, சமையல் அறை, யானைகள் முகாம் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால், அங்கிருந்து கடந்த அக்டோபர் மாதம் மானாம்பள்ளியில் தற்காலிக முகாமிற்கு ஐந்து யானைகள் கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், கடந்த வாரம் மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்த, ஐந்து கும்கி யானைகள் வரகளியாறு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வேறு நான்கு கும்கி யானைகள் வால்பாறைக்கு கொண்டுவரப்பட்டன.மானம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரீதரன் கூறியதாவது: உலாந்தி வனச்சரகம் வரகளியாறு யானைகள் முகாமில், பராமரிப்பு பணி நடப்பதால், மானாம்பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து கும்கி யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது. கும்கி யானைகளை, நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு பாகன்கள் அழைத்து செல்கின்றனர். கும்கி யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும், மானாம்பள்ளி வனச்சரகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வந்த ஐந்து கும்கி யானைகள், மீண்டும் வரகளியாறு முகாமிற்கு அனுப்பபட்டனர். அங்கிருந்த சின்னதம்பி, பரணி, சுயம்பு, ஓரியன் ஆகிய நான்கு கும்கி யானைகள், மானாம்பள்ளி கொண்டுவரப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் சுழற்ச்சி முறையில், மானாம்பள்ளி மற்றும் வரகலியாற்றில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினார்.