| ADDED : டிச 25, 2025 05:50 AM
கோவை: கோவையை சேர்ந்த இளம்பெண், சென்னை சட்டக்கல்லுாரியில் படிக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக, கோவைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் அவர் பயணம் செய்தார். சட்டக்கல்லுாரி மாணவி அருகில் மற்றொரு வாலிபரும் அமர்ந்திருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அந்த வாலிபர், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை அந்த மாணவி தன் மொபைல்போனில், வீடியோ எடுத்தார். இதை பார்த்ததும், அந்த வாலிபர் தெரியாமல் நடந்ததாக கூறினார். மாணவி தன் மொபைல்போன் காட்சிகளை சக பயணியரிடம் காண்பித்து, நியாயம் கேட்டார். தொடர்ந்து, அந்த மாணவி , ரயில் கோவை வந்ததும், ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், ஏட்டு ஷேக் அப்துல்லா, 38, எனத் தெரிந்தது. சென்னை சென்றவர், ரயிலில் கோவை திரும்பிய போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏட்டு ஷேக் அப்துல்லா மீது காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிய அறிவுறுத்தப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நேற்று, ஷேக் அப் துல்லாவை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.