உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலீட்டாளர் மாநாடு இருக்கட்டும்: முதலில் மாஸ்டர் பிளான் வரட்டும்!

முதலீட்டாளர் மாநாடு இருக்கட்டும்: முதலில் மாஸ்டர் பிளான் வரட்டும்!

-நமது சிறப்பு நிருபர்-தொழில் முதலீடுகளை இழுப்பதற்கு, உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் தமிழக அரசு, உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், எதையுமே செய்யாமல் இருப்பதாக, கோவை தொழில் அமைப்பினரிடம் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு, தமிழக அரசால் நடத்தப்பட்டு, பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக அரசு சார்பில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான முதலீடுகளும், தொழிற்சாலைகளும் சென்னையைச் சுற்றிய பகுதிகளில் அமைவதாகவே ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது, தமிழகத்தின் மற்ற பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு, பெரும் பிரயத்தனம் செய்து வரும் தமிழக அரசு, உள்ளூர் தொழில்களைக் காப்பாற்ற உதவவில்லை என்ற விமர்சனங்களும் எழத் துவங்கியுள்ளன.உதாரணமாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, மின் பயன்பாட்டுக்கான மாதாந்திர நிலைக் கட்டணம் அதிகரிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டும், அதைக் குறைப்பதற்கு அரசு மறுத்து வருகிறது.தமிழகத்தின் எந்தப் பகுதியில், புதிதாக தொழிற்சாலைகள் அல்லது தொழில் கூடங்கள் நிறுவினாலும், அதற்கு அனுமதி பெறுவது குதிரைக் கொம்பாகவுள்ளது. நில உபயோக மாற்றம் துவங்கி, பல்வேறு துறைகளிலும் பல விதமான சான்றுகளையும், திட்ட அனுமதியையும் பெறுவதற்கு, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது; அளவு, மதிப்புக்கேற்ப லஞ்சம் தர வேண்டியுள்ளது.வியட்நாம், வங்கதேசம் போன்ற சிறிய நாடுகளில் கூட, புதிதாகத் தொழில் துவங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில், எல்லா விதமான அனுமதியும் எளிதாகவும், விரைவாகவும் வழங்கப்படுகிறது.குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலம் என்று மார் தட்டும் தமிழக அரசு, திட்ட அனுமதியை எட்டாக்கனியாக வைத்துள்ளது.குறிப்பாக, தொழில் மாவட்டமான கோவையில், நில உபயோக மாற்ற விண்ணப்பத்தைக் குறைக்கவும், புதிய தொழிற்பகுதிகளை உருவாக்கும் வகையிலும் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட வேண்டுமென்று தொழில் அமைப்புகள், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகப் போகும் நிலையிலும், புதிய மாஸ்டர் பிளானை அரசு இழுத்தடித்து வருகிறது.இதுபற்றி எப்போது கேட்டாலும், 'விரைவில் வரும்' என்று அமைச்சர் முத்துசாமி, ரெடிமேட் பதிலைச் சொல்லி வருகிறார்.அது மட்டுமின்றி, மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எல்லாவற்றையும் உயர்த்தியுள்ள தமிழக அரசு, திட்ட அனுமதிக்கான லஞ்சத்தையும் பல மடங்கு உயர வைத்துள்ளது. அதனால் முதலீட்டாளர் மாநாடு நடத்தி, வெளிநாட்டு முதலீடை ஈர்க்கும் முயற்சி, உள்ளூர் தொழில் முனைவோரிடம், கடும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், புதிய மாஸ்டர் பிளானை வெளியிடுவது, விமான நிலைய விரிவாக்கத்தை வேகப்படுத்துவது, ஒற்றைச் சாளர முறை திட்ட அனுமதியை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றைச் செய்வதே, இங்குள்ள தொழில் அமைப்பினரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ