உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுத்தேடலுக்கான நுாலகங்களை... மேம்படுத்தணும்! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அறிவுத்தேடலுக்கான நுாலகங்களை... மேம்படுத்தணும்! அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் அறிவுத்தேடலுக்கு வழிகாட்டியாக உள்ள நுாலகங்கள் வளர்ச்சி பெறாமல் உள்ளன. இவற்றை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுாலக வாசகர் வட்டத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை உள்பட சுற்றுப்பகுதிகளில், ஒரு முதல் நிலை நுாலகம், முழுநேர கிளை நுாலகங்கள் - 3, கிளை நுாலகங்கள் - 17, ஊர்புற நுாலகங்கள் - 14 மற்றும் பகுதி நேர நுாலகங்கள் - 7, வால்பாறையில் இரண்டாம் நிலை நுாலகங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட நுாலகங்கள் செயல்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நுாலகங்களின் தரம் இன்னும் உயர்த்தப்படாமல் உள்ளது. பகுதி நேர நுாலகம் ஊர்புற நுாலகமாகவும்; ஊர்புற நுாலகங்கள் கிளை நுாலகமாக தரம் உயர்த்த அதிகாரிகள் எவ்வித முனைப்பும் காட்டவில்லை. இது கிராமங்களில் வாழும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. கிணத்துக்கடவு, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில், கிளை நுாலகங்கள் செயல்படுகின்றன. இவை முழு நேர நுாலகமாக மாற்றப்படவில்லை. அதில், கிணத்துக்கடவு தாலுகாவாக உருவாகி பல ஆண்டுகள் ஆகியும், முழு நேரம் நுாலகம் செயல்பட நடவடிக்கை இல்லை. தொண்டாமுத்துார், ஜமீன் கோட்டாம்பட்டி, சின்னாம்பாளையம், சின்னப்பம்பாளையம், அட்டக்கடி பகுதி நேர நுாலகம், ஊர்புற நுாலகங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆவல்சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, வடவேடம்பட்டி, மலை முந்திரிபாளையம், பூரண்டாம்பாளையத்தில் உள்ள, ஊர்புற நுாலகங்கள் கிளை நுாலகங்களாக தரம் உயர்த்த வேண்டும். காடம்பாறை, சுப்பேகவுண்டன்புதுார், பொள்ளாச்சி கிளை - 3 நுாலகங்களில், நுாலகர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. நகரம் வளர்ந்தாலும், நுாலகங்கள் வளராமல் உள்ளது நுாலக ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில், 118 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், நுாலகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நுாலகங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. பல கிராமங்களில் இன்னும் நுாலகம் துவங்கப்படாமல் உள்ளதால், மாணவர்கள் நுாலகத் தேவைக்காக பொள்ளாச்சி வர வேண்டிய நிலை உள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கோவை செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள்,அரசியல் கட்சியினர், நுாலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பயனாக இருக்கும் என, நுாலக வாசகர் வட்டத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நுாலக ஆர்வலர் லெனின் பாரதி கூறியதாவது: பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலையில் நுாலகம், 'டிஜிட்டல் நுாலகமாக' மாற்ற அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சியில் நுாலக வளர்ச்சிக்கு யாரும் முன்வந்து திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. பகுதி நேர நுாலகங்கள் ஊர்புற நுாலகமாகவும், ஊர்புற நுாலகங்கள் கிளை நுாலகமாகவும், கிளை நுாலகங்கள் முதன்மை நுாலகங்களாகவும் தரம் உயர்த்த வேண்டும். மேலும், கிளை நுாலகங்கள் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமங்களில் பயன்பாடு இல்லாமல் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள், பொது நுாலகத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், அவை முழு பயன்பாட்டுக்கு வர உதவியாக இருக்கும். இதற்கு, மாவட்ட நுாலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ