வரும் 15ம் தேதி வரை லேசான மழை; விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன?
கோவை; கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை லேசான மழையும், 16ம் தேதி மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுவதாக, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மையத்தின் முதன்மை அலுவலர் அறிக்கை:கோவை மாவட்டத்தில், வரும் நாட்களில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 15ம் தேதி வரை லேசான மழையும், 16ம் தேதி மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. விவசாயிகள் கவனத்துக்கு
சராசரியாக காற்று மணிக்கு, 16 முதல் 20 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான காற்று எதிர்பார்க்கப்படுவதால், ஐந்து மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். நிலவும் வானிலையை பயன்படுத்தி, களையெடுத்தல், உரமிடல், மருந்து தெளித்தல் போன்ற பயிர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மண் ஈரத்தை பொறுத்து, நீர்பாசனம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 15 மி.மீ., மழை பெறும் பட்சத்தில், மானாவாரி சோளத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் யூரியா இட வேண்டும். மண்ணின் ஈரப்பதம் கொண்டு, பின் பருவ கரும்பு நடவை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.கோழிகளுக்கு போதியளவு நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும். தற்போது நிலவும் அதிக ஈரப்பதம் மற்றும் வேகமான காற்று, கால்நடைகளுக்கு இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதை குறைக்க, அடிக்கடி குளிர்ந்த நீரை, உடலின் மேல் ஊற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.