உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொன்னா கேளுங்க; பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க! சோதனைச்சாவடியில் குவிந்து கிடக்குது

சொன்னா கேளுங்க; பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க! சோதனைச்சாவடியில் குவிந்து கிடக்குது

வால்பாறை; அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்கின்றனர். இதனால், வால் பாறையில் சுற்றுச்சூழுல் பாதிக்கப்பட்டு, வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், ஆழியாறு, அட்டகட்டி, சின்கோனா, உருளிக்கல், மளுக்கப்பாறை ஆகிய வனத்துறை சோதனைசாவடிகள் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணியரிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை பறிமுதல் செய்கின்றனர். பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, மஞ்சள் பைகளை இலவசமாக வழங்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, வனத்துறை, நகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுப்பதுடன், உடனடி அபராதம் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் சுற்றுலா பயணியருக்கும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், பிளாஸ்டிக் டம்ளர், கேன், தட்டு, கவர் உள்ளிட்ட, 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்த அரசு தடை விதித்துள்ளது. வால்பாறையை சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணியர் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. சின்கோனா சோதனை சாவடியில், பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானம் மற்றும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் வரும் போது மலைப்பாதையில் பிளாஸ்டிக் கவர்கள் வீசுவதையும், வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை