அன்னூர்: மழைநீர் மற்றும் குளத்து நீர் குடியிருப்புகளுக்குள் செல்வதை தடுக்க, மெட்ராஸ் ஐ.ஐ.டி., குழு அன்னூரில் நேற்று ஆய்வு செய்தது. அன்னூரில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, 119 ஏக்கர் பரப்பளவு குளம் அத்திக்கடவு நீர் மற்றும் மழை நீரால், 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 2023 டிசம்பரில் பெய்த கனமழை மற்றும் குளத்து நீரால், தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாக மழைநீர் தேங்கி நிற்கிறது. 70 ஏக்கர் தோட்டம் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், நேற்று மெட்ராஸ் ஐ.ஐ.டி., சிவில் துறையின் கீர்த்தனா, பவன் மற்றும் கோவை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் அன்னூர் வந்தனர். குளத்தில் உள்ள மதகுகள், குளத்து நீர் செல்லும் பாதை, மழை நீர் செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர், ஐ.ஐ.டி., குழுவிடம், 'குளத்து நீர் மற்றும் மழை நீர் கிழக்கு நோக்கி செல்லும் படி பாதை அமைக்க வேண்டும். நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர். கோயில் தோட்டம் விவசாயிகள், ஐ.ஐ.டி., குழுவிடம் பேசுகையில், 'இரண்டரை ஆண்டுகளாக இப்பகுதியில் விவசாயம் செய்யாமல் உள்ளோம். வெறும் 3 அடி தோண்டினாலே நீர் வருகிறது. எந்தப் பயிரும் செய்ய முடியவில்லை. நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர். ஐ.ஐ.டி., குழுவினர் கூறுகையில், 'பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் அத்திக்கடவு திட்ட பொறியாளர்களிடம் தகவல்கள் சேகரித்து, முழுமையாக ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்' என்றனர்.