| ADDED : டிச 29, 2025 05:21 AM
தஞ்சையை அடுத்துள்ள மாவட்டமாக அறியப்படும் நாகப்பட்டணம் போலவே, கொங்கு நாட்டிலும் இதே பெயருடன் ஒரு பசுமை நிறைந்த ஊர் 1879-ம் ஆண்டு வரை இருந்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரம் முதல் நொய்யல் ஆற்றின் கரையான காஞ்சியாற்றங்கரை வரை பரந்த இந்த ஊர், 'நாகேசுர நல்லுார்' என்று பெயராலும் அழைக்கப்பட்டது. இச்சிற்றுாரை உள்ளடக்கிய பெரிய ஊர் முட்டம் ஆகும். இந்த ஊரில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைணவக் கோயிலும், அதற்கும் முன்பே உருவான சிவாலயமும் இருந்தன. கொங்குச் சோழன் கரிகாலன், கரூரிலிருந்து இவ்வூர் வரை, 32 அணைகள் கட்டி வேளாண்மை வளர்ச்சியை ஏற்படுத்தினான்; அவற்றில் ஒன்றே முட்டத்து அணை. 36 சிவாலயங்கள் கட்டப்பட்டதாக முட்டம் தல வரலாறு கூறுகிறது. 1998ம் ஆண்டு முட்டத்துநாகேசுரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. வெள்ளியங்கிரி மலைக்கு அளிக்கப்பட்ட தெய் வீ கப் பெருமை, அரச மரங்கள் அடர்ந்த 'அரச வனம்' என்ற பெயராலும் விளங்கியது. ஆதி சங்கரர் பாடியதாகக் கூறப்படும் வடமொழிச் சுலோகம், இன்றும் பேரூர் ஆற்றங்கரையில் ஓதப்பட்டு வருகிறது. 1879ம் ஆண்டு இந்த நாகப்பட்டணம், போளுவாம் பட்டியுடன் இணைக்கப்பட்டபின், அதன் தனிப்பட்ட அடையாளம் மறைந்தது. ஆனால் அதன் வரலாற்றுச் சுவடுகள் கோவையில் நிலைத்தன.