தேசிய வருவாய் திறன் வழி தேர்வு; மாணவர்கள் தகுதி
பொள்ளாச்சி,; மத்திய அரசின், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வாகி உள்ளனர்.மத்திய அரசின், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டம் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நடத்தப்படுகிறது.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வில், மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வாகும் மாணவ, மாணவியருக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.அவ்வகையில், கடந்த மாதம் நடத்தப்பட்ட தேர்வில், பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி விஜிஸ்ரீ தேர்வாகி உள்ளார். இவர் மற்றும் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பரிசு வழங்கி வாழ்த்தினார்.இதேபோல, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஹன்சநந்தினி, சலீமா, வர்ஷினி, சந்தியா, மாணவர்கள் ஆனந்தகண்ணன், சிவரஞ்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களை பள்ளித் தலைமையாசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.மாணவர்கள் கூறுகையில், 'இதுபோன்ற தேர்வு எழுதுவதால், கற்றல் ஆர்வம் அதிகரிக்கிறது. தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது,' என்றனர்.