உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பழ ஈக்களை கவர்ந்து அழிக்கும் புதிய கவர்ச்சிப் பொறி தயார் நானோ நுட்பத்தில் வேளாண் பல்கலைக்கு காப்புரிமை

 பழ ஈக்களை கவர்ந்து அழிக்கும் புதிய கவர்ச்சிப் பொறி தயார் நானோ நுட்பத்தில் வேளாண் பல்கலைக்கு காப்புரிமை

கோவை: பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈக்களை கட்டுப்படுவதற்காக நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'கவர்ச்சிப் பொறி'க்கு வேளாண் பல்கலை காப்புரிமை பெற்றுள்ளது. இத்தொழில்நுட்பத்தை உருவாக்கிய பூச்சியியல் துறை பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: பூசணி வகை காய்கறிகள், பாகல், புடலை, சுரை உள்ளிட்ட பந்தல் காய்கறிகளைப் பொறுத்தவரை பூச்சித் தொல்லைகளில் பழ ஈக்கள் முக்கியமானவை. இந்த ஈக்களின் தாக்குதலால், காய்கறிகள் முதிர்வுக்கு முன்னரே உதிர்ந்து 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் பாதிக்கப்படுகிறது. பழ ஈக்களை கட்டுப்படுத்த, கவர்ச்சிப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொறி ஆண் ஈக்களை கவர்ந்து அழித்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறிய மரக்கட்டை, ஆண் ஈக்களை உணவுசார் அடிப்படையில் கவர்ந்திழுக்கும் வாசனை திரவியத்தில் நனைக்கப்பட்டிருக்கும். அதை, ஒரு மூடப்பட்ட பிளாஸ்டிக் குடுவையில் கட்டி தொங்கிவிட வேண்டும். துளைகள் வழியாக உள்ளே நுழையும் ஆண் பழ ஈ, மயக்கமுற்று, குடுவைக்குள்விழுந்து உயிரிழக்கும். ஆனால், நடைமுறையில் உள்ள கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன் ஒரு மாதம் வரைதான் தாங்குகிறது. இதனால், ஒரு சாகுபடி சுழற்சிக்கு பல முறை, கவர்ச்சிப் பொறிகளை மாற்ற வேண்டியுள்ளது. நாங்கள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, ஏக்கருக்கு 10 பொறிகளை, தலா 30 அடி இடைவெளியில் தொங்கவிட்டால் போதும். நானோ தொழில்நுட்பத்தால் மிக மெதுவாகவே வாசனையை வெளியிடப்பட்டு, குறைந்தது 15 வாரங்களுக்கு நீடிக்கும். ஒரு சாகுபடி முறைக்கு ஒன்று அல்லது 2 முறை வைத்தால் போதும். பூக்கும் காலத்தில் அதாவது 60, 65வது நாட்களில் வைக்கலாம். இதனால், மகசூல் இழப்பு 40 சதவீதம் வரை தவிர்க்கப்படும். இடுபொருள் செலவும் குறையும். இந்த தொழில்நுட்பத்துக்கு, காப்புரிமை பெற்றுள்ளோம். 10 கட்டைகள் அடங்கிய பாக்கெட், வேளாண் பல்கலையில் ரூ.788க்கு விற்பனை செய்யப்படுகிறது. www.tnauagricart.comஆன்லைன் தளத்தில் ரூ.918க்கு வாங்கலாம். நேரடியாக பயிர்கள் மீது எவ்வித ரசாயனமும் தெளிக்கப்படுவதில்லை என்பதால், இது ஒரு பசுமைத் தொழில்நுட்பம் ஆகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை