சிறுதுளி உருவாக்கும் ஸ்ரீவாசவி வனம் மரக்கன்று நடும் புதிய திட்டம் துவக்கம்
கோவை; சிறுதுளி மற்றும் வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில், 'ஸ்ரீவாசவி வனம்' என்ற புதிய மரக்கன்று நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.கோவை சூலுார் ஒன்றியத்தில் உள்ள கிட்டாம்பாளையத்தில், சிறுதுளி மற்றும் வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில், 'ஸ்ரீவாசவி வனம்' என்ற பெயரில் மரம் நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில், 3,000 நாட்டு வகை மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. இந்த விழாவை, கோவை ஆரிய வைஸ்ய சமாஜம் தலைவர் விஜயகுமார், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கே.சி.ஜி.எப்., சத்தியநாராயணன் மற்றும் கிட்டாம்பாளையம் பஞ்சயத்து தலைவர் சந்திரசேகர் ஆகியோர் துவங்கி வைத்தனர். இது குறித்து சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது: சிறுதுளி அமைப்பு, வாசவி கிளப் இன்டர்நேஷனல் போன்ற பல அமைப்புகளுடன் இணைந்து இதுவரை எட்டு லட்சத்து 60 ஆயிரம் மர கன்றுகளை, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நட்டு பராமரித்து வருகிறது. இதன் மூலம் கிட்டாம்பாளையம் பகுதிகளில் காற்றின் துாய்மையும், பசுமை பரப்பும் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மேம்பட்டு, இயற்கை செழுமையாகும். எதிர்காலத்தில் அரசூர், கணியூர், கிட்டாம்பாளையம் மற்றும் மோப்பேரிபளையம் போன்ற கிராம பஞ்சாயத்துகளில் நீர்நிலையை மேம்படுத்தி, மரம் வளர்க்கும் திட்டம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.