பணமில்லை! செம்மொழி பூங்கா பணி முடிக்க ரூ.47 கோடி கேட்டு காத்திருப்பு
கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் புதிதாக உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா பணிகளுக்கு, கூடுதலாக ரூ.47 கோடி கோரப்பட்டது. அந்நிதி ஒதுக்க, தமிழக அரசு தாமதித்து வருகிறது. கோவை, காந்திபுரத்தில், 45 ஏக்கரில் ரூ.167.25 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2023 டிச. 18ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பூங்கா வளாகத்தில் பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், நடைபயிற்சி பாதை, சங்க கால மர வகைகள், அரிய வகையான பூச்செடிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சிறுவர், சிறுமியருக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கடந்தாண்டு அக்., மாதம் முதல்வர், இப்பணிகளை ஆய்வு செய்து, '2025 ஜூன் மாதம் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என அறிவித்துச் சென்றார். ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், செப்., வரை அவகாசம் கோரப்பட்டது; அதன்படியும் முடிக்க முடியவில்லை. இப்பணிக்கு ரூ.167.25 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதில், 50 சதவீதமான ரூ.83.62 கோடியை தமிழக அரசும், மீதித்தொகையை மாநகராட்சியும் வழங்க வேண்டும். இச்சூழலில், ஆக., மாதம் செம்மொழி பூங்காவை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவிடம், கூடுதலாக ரூ.50 கோடி மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் நிதி கிடைக்காததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: செம்மொழி பூங்கா அமைப்பதற்கான ரூ.167.25 கோடியில், ரூ.140 கோடி செலவு செய்துள்ளோம். தற்போது ரூ.20 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன. அரசிடம் கூடுதலாக ரூ.47 கோடி கேட்டுள்ளோம். நிதி வந்ததும் பணிகள் முடிக்கப்படும். 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. டிச., மாதத்துக்குள் முடிக்கும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.