உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  10 நாளாக குடிநீர் வரவில்லை; வடக்கு பகுதி மக்கள் தவிப்பு குழாய் உடைப்பு சரியானதும் தண்ணீர் வருமாம்

 10 நாளாக குடிநீர் வரவில்லை; வடக்கு பகுதி மக்கள் தவிப்பு குழாய் உடைப்பு சரியானதும் தண்ணீர் வருமாம்

கோவை: சரவணம்பட்டி அருகேபிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டும், 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் வடக்கு மண்டல மக்கள் அவதிப்படுகின்றனர். பில்லுார் அணையில் இருந்து பில்லுார்-1, 2, 3 திட்டங்களில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சரவணம்பட்டி, அம்மன் நகரில், 1,000 மி.மீ. விட்டம் கொண்டபில்லுார்-2 குடிநீர் திட்ட பிரதான குழாயில், 24ம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால் வடக்கு, கிழக்கு மண்டலத்தில் 34 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. அடுத்து, 27ம் தேதி 6 மீட்டர் நீள குழாய் பதித்து பாதிப்பை சரி செய்தனர். பிறகும், பல வார்டுகளுக்கு இதுவரை குடிநீர் வரவில்லை. காந்திமாநகர், கணபதி மாநகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். ”குடிநீர் கேன் விலை கொடுத்து வாங்குகிறோம், உப்பு தண்ணீரை பயன்படுத்துகிறோம், இதற்காகவா வரி செலுத்துகிறோம் ?” என கேட்கின்றனர். பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டு, 35 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் தண்ணீர் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி அப்பகுதியில் குழாய் உடைவது தொடர் கதையாக உள்ளது. கடந்த மாதமும் இதேபோல் குழாய் உடைந்ததால் மக்கள், 10 நாட்களாக குடிநீரின்றி சிரமப்பட்டனர். இன்று புத்தாண்டு கொண்டாடப்படும் சூழலில், மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்க வேண்டிய மக்கள், 'எப்போது தண்ணீர் வரும்' என்று பாத்திரங்களுடன் காத்திருக்கும் அவலத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்று அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாககட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, சப்ளை ஏன் தடைபட்டது, எப்போது சரியாகி தண்ணீர் வரும் என்ற தகவலை அதிகாரிகள் ராணுவ ரகசியம் போல மூடிமறைக்காமல், மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி உதவி பொறியாளர்களிடம் கேட்டபோது, 'குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டதும் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, வினியோகிக்கப்படும்' என்றனர். எப்போது சரி செய்யப்படும் என கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை