| ADDED : ஜன 31, 2024 10:47 PM
உடுமலை- பிப்., இரண்டாவது வாரம் பிளஸ் 2 மாணவருக்கான செய்முறை தேர்வு துவங்க உள்ள நிலையில், தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், பிப்., 12 முதல், 17ம் தேதி வரை பிளஸ் 2 மாணவருக்கு, பிப்., 19 முதல், 24 வரை பிளஸ் 1 மாணவருக்கு செய்முறைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.தேர்வுக்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைத் தொடர்ந்து, பள்ளித்தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் செய்முறைத்தேர்வு மதிப்பெண் பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பிப்., 5 முதல், 17ம் தேதிக்குள் தேர்வுத்துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விபரங்களை பூர்த்தி செய்து, மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.