விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கோவை; விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த ராமசாமி,68. 2022, செப், 6 ல், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ராமசாமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயரில், ஆர்.எஸ்.புரத்திலுள்ள இப்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்ததால், இழப்பீடு கேட்டு அவரது மனைவி விண்ணப்பித்தார். ஆனால், ராமசாமிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததை மறைத்து, இன்சூரஸ் செய்துள்ளதால், காப்பீடு தொகை வழங்க முடியாது என்று கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தனர். இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சரஸ்வதி மற்றும் வாரிசுதாரர்கள், வழக்கு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு:விபத்து அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, மனுதாரரின் கணவர் இறந்துள்ளார். இறந்தவருக்கு முன் நோய் இருந்தது குறித்து, எதிர்மனுதாரர் நிரூபிக்கவில்லை. இறப்புக்கு மூல காரணம் விபத்து என்பதால், இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவி மற்றும் வாரிசுதாரர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், மனஉளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்கு, 15,000 ரூபாயும் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.