ட்ரோன் மூலம் கட்டடங்கள் அளவீடு செய்வதை நிறுத்த உத்தரவு!: சொத்து வரி வசூலிப்பதில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களை, 'ட்ரோன்' மூலம் மறுஅளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 5.86 லட்சம் வரி விதிப்பு கட்டடங்கள் இருக்கின்றன. புதிதாக கட்டடம் கட்ட வேண்டுமெனில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். இடைத்தரகர்கள் இல்லாமலோ அல்லது லஞ்சம் கொடுக்காமலோ, வரைபட அனுமதி பெற முடிவதில்லை. அதனால், அனுமதி பெறாமலேயே பலரும் கட்டடங்கள் கட்டிக் கொள்கின்றனர்.சில பகுதிகளில் ஏற்கனவே உள்ள இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. சில இடங்களில் குடியிருப்புகள் வணிக கட்டடமாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கீழே வணிகப் பகுதி, மேல்பகுதி குடியிருப்பாக இருக்கிறது. ஆனால், மாநகராட்சிக்கு குடியிருப்புக்கான சொத்து வரி செலுத்தப்படுகிறது. கூடுதல் பரப்புக்கு கட்டப்பட்ட கட்டடத்துக்கு வரி செலுத்துவதில்லை. இதை கண்டறிந்து வரியை மறுசீராய்வு செய்ய, 'ட்ரோன்' சர்வே செய்யப்படுகிறது.முதல்கட்டமாக, வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள வார்டுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் இருக்கும் வார்டுகளில் 'ட்ரோன்' சர்வே செய்யப்பட்டு, சொத்து வரி மறுசீராய்வு செய்யப்படுகிறது. தற்போது செலுத்தும் சொத்து வரியை காட்டிலும் பல மடங்கு அதிகமாவதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 'ட்ரோன்' சர்வே பணியை நிறுத்தச் சொல்லி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்திலும், மண்டல கூட்டங்களிலும் பலமுறை வலியுறுத்தினர். இருப்பினும், இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.பில் கலெக்டர்கள், 'சர்வே' செய்வதில் கவனம் செலுத்தியதால், நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலில் முனைப்பு காட்டாமல் விட்டு விட்டனர். இதன் காரணமாக, வரி வசூல் மிகவும் பின்தங்கியிருக்கிறது. நிதியாண்டு முடிவதற்கு இரு மாதங்களே இருக்கிறது; இன்னும், 300 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. சொத்து வரி வசூலில் மிகவும் பின்தங்கி இருப்பதால், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆய்வு செய்தார். அப்போது, 'ட்ரோன்' சர்வே பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சொத்து வரி வசூலிப்பதில் கூடுதல் அக்கறை செலுத்த அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, வரி வசூலில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் ஈடுபட துவங்கியுள்ளனர்.