பந்தல் காய்கறி சாகுபடி; விவசாயிகள் ஆர்வம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் பலர், பந்தல் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:விளைநிலங்களில், பந்தல் அமைக்க, அதிக செலவு பிடிக்கும் என்பதால், சிறு, குறு விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது, தோட்டக்கலைத்துறை சார்பில், பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.அதனால், விவசாயிகள் பலர், பந்தல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். சாதாரண முறையில் சாகுபடி செய்வதை விட, இதில் அதிகளவு மகசூல் கிடைக்கிறது.செடிகளை நடவு செய்தது முதல், கொடிகளை பந்தலில் ஏற்றுவது வரை கவனமாக இருக்க வேண்டியுள்ளது. காற்றினால், செடிகள் உடைந்து விடாமல் இருக்க சுற்றிலும், தென்னை மட்டைகள் வைத்து மறைக்கப்படுகிறது.பந்தல் காய்கறி சாகுபடியில் ஓரளவு வருவாய் கிடைத்தாலும், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வைரஸ் நோய் என பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுகிறது.பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை பகுதிகளில் பந்தல் காய்கறி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த சாகுபடி மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து, தோட்டக்கலைத்துறையினர், அவ்வப்போது ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.