உடுமலை;மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், ஒவ்வொரு கிராம மற்றும் நகரப்பகுதிகளில், அங்குள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.துவக்க நிலை, உயர் துவக்க நிலை என இரண்டு பிரிவுகளாக இந்த மையங்கள் செயல்படுகின்றன. மையத்துக்கு தலா ஒரு தன்னார்வலர் வீதம் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.பள்ளிகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையிலும், இத்திட்டம் தொடர்ந்து நடக்கிறது. பள்ளி முடிந்த பின், மாலையில், 5:00 முதல், 7:00 மணி வரை இந்த மையங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.பள்ளி நேரத்தை முடித்து, மீண்டும் இத்திட்டத்தில் கூடுதல் நேரமாக பாடங்களை படிப்பது, மாணவர்களுக்கு ஆர்வமின்மையை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என இரண்டு தரப்பிலும் ஊக்கப்படுத்தினாலும், மாணவர்கள் இந்த வகுப்புகளுக்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.உடுமலை கோட்டத்துக்குட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில், இத்திட்டம் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. அலுவலர்களின் ஆய்வின்போது மாணவர்களை வரச்சொல்லி பதிவு செய்துகொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும் எந்த பயனும் இல்லை.சில மையங்களில், வருகையை பதிவு செய்து விட்டு பள்ளிக்கான வீட்டு பாடங்களை மட்டுமே செய்கின்றனர்.பள்ளிகளில் மாணவர்களுக்கான இணை செயல்பாடுகளை ஊக்குவிப்பது, மிகவும் கற்றல் குறைவான மாணவர்களுக்கு தனிகவனம் செலுத்துவதற்கும், போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு, இதுபோன்ற தன்னார்வலர்கள் மிகவும் தேவையாக உள்ளனர்.இதனால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், இப்போதைய சூழலில் கல்வி இணை செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாற்றம் கொண்டுவர வேண்டும்.தவிர, மையங்களாக செயல்படாமல் தன்னார்வலர்கள் பள்ளிகளில் நேரடியாக வந்து நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென, பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.