கழிவுநீர் தேங்குவதால் பிரச்னை தீர்வு காணாததால் மக்கள் வேதனை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர், சாக்கடை கால்வாயில் நேரடியாக கலப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகளும் நடக்கிறது.நகரின் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இதனால், இத்திட்டம் துவங்கியது முதல், மக்கள் பல்வேறு பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட குழியில் கழிவுநீர் செல்லாமல், நேரடியாக சாக்கடை கால்வாயில் கலப்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கிறோம். இங்கு கடந்தாண்டு, பாதாள சாக்கடை திட்ட குழாய் பழுதடைந்ததால், கழிவுநீர் நேரடியாக சாக்கடை கால்வாயில் விடப்படுகிறது. மேலும், ஒரு புறம், போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிக்காக கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் மரம் விழுந்து கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால், கால்வாயில் கழிவுநீர் அதிகளவு தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, கூறினர்.