உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூமாட்டி பழங்குடியினருக்கு கட்டப்படும் வீடுகளில்... அஸ்திவாரம் சரியில்லை!

கூமாட்டி பழங்குடியினருக்கு கட்டப்படும் வீடுகளில்... அஸ்திவாரம் சரியில்லை!

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கூமாட்டியில் பழங்குடியினருக்கு கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரம், செம்மண் கலந்து அமைப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு பின் கட்டப்படும் வீடு தரமின்றி கட்டினால் என்ன செய்வது என வேதனை தெரிவித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், வீடு கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி, கோழிகமுத்தியில் - 31, கூமாட்டி - 22, எருமைப்பாறை - 9, நாகரூத்து 1-ல் - 23, நாகரூத்,2ல் - 15 வீடுகள் என மொத்தம், 100 வீடுகள் கட்டப்படுகின்றன.மலைப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும், 4 லட்சத்து, 95 ஆயிரத்து, 430 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கூமாட்டியில் கட்டப்படும் வீடுகள் தரமின்றி கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட கூமாட்டி பழங்குடியின குடியிருப்பில், 42 குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிதி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், தற்போது வீடு கட்டுவதை கண்டால் அச்சமாக உள்ளது. வீட்டின் அஸ்திவாரம், கான்கிரீட் போடாமல் செம்மண் கலந்து அதில் கற்களை அடுக்குகின்றனர். அஸ்திவாரம் தரமாக இல்லாவிட்டால், வீடு எத்தனை ஆண்டுகளுக்கு நிலைக்கும் என்பதே தெரியாது. மழைக்காலங்களில் அச்சத்துடன் வாழும் சூழலே உள்ளது.அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், வீட்டை தரமாக கட்ட வேண்டுமென கோரிக்கையும் ஏற்கப்படாதது வேதனையாக உள்ளது. அரசு உரிய கவனம் செலுத்தி வீடுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஆய்வு செய்யப்படும்!

சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா கூறுகையில், ''கூமாட்டியில் கட்டப்படும் வீடுகள் குறித்து புகார் எழுந்துள்ளது குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை தர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் தனிப்பட்ட முறையில் வீடுகள் கட்ட முடியாத நிலையில் வனத்துறை வாயிலாக ஒப்பந்ததாரரை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.செம்மண் கலந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என கள ஆய்வு செய்து, அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள் தரமாக கட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,'' என்றார்.

வீடுகள் கட்ட நிதி ஒதுக்கிய அரசின் நோக்கமே பாழாகிறது!

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியான கூமாட்டியில், மழை அதிகம் பெய்யும். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரம் மண்ணால் அமைக்கப்படுகிறது.மழைக்காலத்தில் மண் அரிப்பு, மழை வெள்ளம் ஏற்படும் போது, கற்கள் பெயர்ந்து பெரும் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.சிமென்ட் கலவை கொண்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.போக்குவரத்தை காரணம் காட்டி, கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாது எனக்கூறி தரமின்றி பணிகளை மேற்கொள்வது ஏற்க முடியாது. காரணங்களை கூறி தரத்தை குறைப்பது நியாயமில்லை.அரசு எந்த நோக்கத்துக்காக வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததோ, அந்த நோக்கமே பாழாகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்கள், பழங்குடியின செயற்பாட்டாளர்கள், சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், வனத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளை சேர்ந்தவர்களை இணைத்து கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.பணிகளை வாரத்துக்கு ஒரு முறை இந்த குழுவினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கூமாட்டி மட்டுமின்றி, மற்ற பகுதியில் கட்டும் வீடுகளின் தரமும் கண்காணிப்பு செய்ய வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை