உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்

 கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது! சப் - கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி: 'கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது,' என, பழனிக்கவுண்டனுார், சூலக்கல் கிராம மக்கள் சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.சூலக்கல் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சூலக்கல்லில், தனி நபர்கள் கல்குவாரி அமைக்கவும், கனிம இருப்பு கிடங்கு அமைக்கவும் விண்ணப்பித்துள்ளனர். இந்த பகுதி விவசாயப்பகுதி என்பதால், ஆடு, மாடு பாதிக்கப்படுவதோடு, விவசாய விளை பொருட்களும் பாதிக்கப்படும். மேலும், இப்பகுதியில் சுற்றுப்புறச்சூழல் மாசுபடும் என்பதால், பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படும். தேசிய மரமமான பனை மரம் அருகில் பொது வண்டிப்பாதையும்; தார் ரோடு உள்ளது. பள்ளி பஸ்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து வழித்தடம் என்பதால் அவர்களின் சுகாதாரமும் பாதிக்கப்படும்.சட்ட வரையறுத்தலுக்கு புறம்பானது. மேலும், அப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப்பிரிவு, பாரம்பரிய வீடுகளும், 300 மீட்டரில் உள்ளது. நீர்நிலை மாசு என சுற்றுச்சூழல் மாசுபடும். குடியிருப்பு பகுதியில் வசிப்போர் பாதிக்கப்படுவர். எனவே, இந்த அனுமதி வழங்குவதை மறுபரிசீலனை செய்து தடை உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. * பழனிக்கவுண்டனுார் மக்கள், விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கிணத்துக்கடவு தாலுகா, சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிக்கவுண்டனுார் கிராமத்தில், தனிநபர்களுக்கு சொந்தமான விவசாய பூமியில் குவாரி அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. இங்கு குவாரி அமைக்க கனிமவள விதிகளை புறந்தள்ளி தவறான தகவல்களுடன் விண்ணப்பம் அளித்தாக தெரிகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.உரிமம் கோரப்பட்டுள்ள இடத்தின் அருகில், ஓடை புறம்போக்கில் அரசால் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. உரிமம் கோரப்பட்டுள்ள பகுதி அருகே உயர்தர விஷமுறிவு மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி போன்ற உயர் தொழில்நுட்ப முயற்சிகளில், தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இங்கு குவாரி அமைத்தால், ஆராய்ச்சி கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடும். பாறைகளை உடைக்க வெடி வைப்பதால் ஒலி மாசு ஏற்படும். சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படும். எனவே, குவாரி குத்தகை உரிமம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேறகொள்வதை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர். * ஆச்சிப்பட்டி அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில், குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும்.தற்போது வரும் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட நீரை, அருகே உருவாகும் நகருக்கு கொண்டு செல்ல முற்படுவதை தடுக்க வேண்டும். பொதுக்கிணற்றை சுத்தம் செய்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். சர்ச் ரோட்டில் இருந்த போர்வெல் அடிபைப்பை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை