பொள்ளாச்சி: வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து நாட்டுக்கல் பாளையம் செல்லும் வழித்தடத்தில், குழாய் பதிப்பு பணிகள் முழுமை பெற்ற பின், புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொள்ளாச்சி --- வால்பாறை சாலை முதல் பாலமநல்லுார் வழியாக பக்கோதிபாளையம் சாலை (4.46 கி.மீ., நீளம்), பொள்ளாச்சி -- வால்பாறை சாலை முதல் ஜமீன்கோட்டாம்பட்டி வழியாக வஞ்சியாபுரம் சாலை (3.2 கி.மீ., நீளம்), ரங்கசமுத்திரம் முதல் மாக்கினாம்பட்டி சாலை (2.98 கி.மீ., நீளம்) கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. துறை சார்ந்த அனுமதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு, அரசாணைக்கு அதிகாரிகள் காத்திருகின்றனர். அதேநேரம், ரோடு தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து நாட்டுக்கல்பாளையம் வழித்தடத்தில், முதற்கட்டமாக, 800 மீ., துாரமும், இரண்டாம் கட்டமாக, 1,600 மீ., துாரம் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே , 295 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட மறு சீரமைப்புக்கு, 51 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணியும் வேகமெடுத்துள்ளது. அதன்படி, வஞ்சியாபுரம் பிரிவில் துவங்கி, நாட்டுக்கல்பாளையம் செல்லும் சாலையோரம் 5 கி.மீ., துாரம், வார்ப்பு இரும்பு குழாய் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, வார்ப்பு இரும்பு குழாய்கள் தருவிக்கப்பட்டு, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குழாய் பதிக்கும் பணியை முடித்த பின் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறியதாவது: பல பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைத்தவுடன் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தார் சாலை சேதமடைகிறது. எனவே, இப்பகுதியில், குழாய் பதிக்கும் பணிகள் முழுமை பெற்ற பின், தார் சாலை அமைக்க வேண்டும். இதற்கு துறை ரீதியான அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தார் சாலை அமைப்பதால் அதன் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.