| ADDED : பிப் 25, 2024 10:43 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.பொள்ளாச்சி நகரில், பாதாளச்சாக்கடை திட்டம் துவங்கிய நாள் முதல், இதுவரை பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். தற்போது இத்திட்டத்தில், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.இந்நிலையில் இத்திட்ட ஆள் இறங்கும் குழிகள் சேதம் மற்றும் கழிவுநீர் வரும் பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதில், ராஜாமில் ரோட்டில் உள்ள ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, கழிவுநீர் அதிகளவு வெளியேறி கடும் துர்நாற்றம் வீசியது.அவ்வழியாக செல்வோர், பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி சென்றனர். இச்சம்பவம் அடிக்கடி நடப்பதால், நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் உள்ள, ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, கழிவுநீர் வெளியேறி ரோட்டில் வெள்ளமாக ஓடியது.இதை கடந்து செல்ல, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முயற்சித்த போது, கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் நடந்தது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகினாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன், கழிவுநீர் வெளியேறிய போது, தற்காலிக தீர்வாக அதை சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அதே பிரச்னை நீடிக்கிறது.அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.