பேரூரா... பட்டீசா கோஷம் முழங்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்
தொண்டாமுத்தூர்; 'பேரூரா... பட்டீசா' என்ற கோஷம் விண்ணை பிளக்க, பேரூர் பட்டீஸ் வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம், கோலாகலமாக நடந்தது.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த, 2ம் தேதி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து, நாள்தோறும், காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்தன.காலையில், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும், மாலையில், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகன உலா நடந்தது. கடந்த, 6ம் தேதி இரவு, வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பட்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.அதிகாலை, 5:30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. காலை, 8:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், சோமாஸ்கந்தர், பச்சை நாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, நடராஜர் ஆகியோர் எழுந்தருளினர்.காலை முதல் மாலை வரை, திருத்தேரில் வீற்றிருந்த சுவாமிகளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் மாலை, 4:45 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.அதனைத்தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின், 'பேரூரா' 'பட்டீசா' என்ற கோஷத்துடன், சிறுவாணி மெயின் ரோடு, ரத வீதிகளில், ஒன்றின் பின் ஒன்றாக, 5 தேர்கள் வலம் வந்தன. தேரோட்டத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு, வழிநெடுகிலும், அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பகல், 2:00 முதல் இரவு 10:00 மணி வரை, சிறுவாணி ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.நாளை (10ம் தேதி), இரவு, 9:00 மணிக்கு, தெப்பத் திருவிழா நடக்கிறது. 11ம் தேதி, நடராஜர் அபிஷேகம், மஹா தீப ஆராதனை நடக்கிறது. அதன்பின், இரவு, 8:00 மணிக்கு, கொடி இறக்குதலுடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைகிறது.