மேலும் செய்திகள்
தொப்பம்பட்டி பிரிவு சிக்னல் பிரச்னைக்கு தீர்வு
1 minutes ago
நிழற்கூரை அவசியம்
4 minutes ago
தார் ரோடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
11 minutes ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் ஈடுபடும் கடைக்கு அபராதமும், மீறி விற்பனை செய்யும் கடையின் உரிமத்தை ரத்து செய்யவும், மீண்டும் விற்பனையில் ஈடுபட்டால் கடையை பூட்டி 'சீல்' வைக்கும் நடவடிக்கையிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், சமீப காலங்களாக போலீசார் மற்றும் சுகாதார துறையினரின் பிடி விலகியதால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த, 2013ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீடிக்கப்படுகிறது. தடை அமல் உள்ள நிலையில் சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடையின்றி விற்பனை ஆகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. இதனால் மறைமுகமாக விற்பனை செய்வது கோவை புறநகர்களில், குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து விட்டது. பெரும்பாலான சிறு கடைகளில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக வரும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு விற்பனை செய்வதில்லை. மொத்த வியாபாரிகளிடம் வாங்கும் சில்லறை வியாபாரிகள், ஒவ்வொரு பாக்கெட்டுக்கும், 40 முதல், 50 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு பாக்கெட்டின் ஒரிஜினல் விலை, 15 முதல், 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அவற்றை, 40 முதல், 60 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர். போலீஸ் கண்காணிப்பு அதிகரித்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை அடியோடு தவிர்த்து விடுகின்றனர். போலீசார் அல்லது சுகாதார துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்த வருகின்றனர் என்பதை அந்தந்த துறை சார்ந்த சிலர் வியாபாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதால், போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பி விடுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடையில் உள்ள பிற பொருள்களை விற்பனை செய்வதற்காக, குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. போலீசார் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றனர். போலீசாரும், சுகாதார துறையினரும் மீண்டும் சாட்டையை சுழற்றினால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
1 minutes ago
4 minutes ago
11 minutes ago