உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தேனீ கொட்டி தொழிலாளி பலி

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன், 52, கூலி தொழிலாளி. இவர் தனது சக தொழிலாளர்களுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக ராஜனை மலைத்தேனீக்கள் சூழ்ந்து கொட்டியது. அவருடன் வேலை பார்த்த சதீஷ் மற்றும் பஞ்சான் ஆகியோரையும் தேனீ கொட்டியது. இதில், அதிகம் பாதிப்படைந்த ராஜனை, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.மற்ற இருவரும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏ.டி.எம்., கொள்ளையன் கைது

வால்பாறை அடுத்துள்ள, நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்தவர் முருகம்மாள். இவர், கடந்த 7ம் தேதி, வால்பாறை நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க சென்ற போது, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நஜீப்,36, என்பவர் பணம் எடுத்து தருவதாக கூறி அவரிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டை வாங்கி, ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு, அவர் சென்ற பின் வங்கி கணக்கில் இருந்து, ஒன்பதாயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.இதுகுறித்து, வால்பாறை போலீசில் முருகம்மாள் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., ஸ்ரீநிதி தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நஜீப்பை கைது செய்தனர்.விசாரணையில், வால்பாறையில் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவி செய்வது போன்று நடித்து, அவர்களுக்கு வேறு ஏ.டி.எம்.,கார்டை கொடுத்து, அவர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 44 ஏ.டி.எம்.,கார்டுகள், பணம், 5,290 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதன்பின், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வாலிபருக்கு கத்திக்குத்து

கிணத்துக்கடவு, காந்திநகரை சேர்ந்தவர் சூர்யா, 23, தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த, கிணத்துக்கடவை சேர்ந்த சரவணமதி, 20, குரு, 20, ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதன்பின், சூர்யா அவரது நண்பரான மனோஜை அழைத்துக் கொண்டு, கிணத்துக்கடவு பொன்மலை நகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த, குரு மற்றும் சரவணமதி ஆகியோருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சரவணமதி, குரு, இருவரும், சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில், காயமடைந்த சூர்யாவை அப்பகுதியினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணமதி, குரு ஆகியோரை தேடுகின்றனர்.

கஞ்சா விற்ற ஒருவர் கைது

பொள்ளாச்சி அருகே, மணல்மேடு பகுதியில் கோட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் ஸ்டாப் பின்பக்கம், சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ஆனைமலை பெத்தநாயக்கனுாரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்,22 என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இரும்பு தடுப்புகள் திருட்டு

ஆனைமலை தாலுகா, தாத்துார் - பெரியபோது ரோட்டில் குளத்துப்புதுார் வளைவில் விபத்து ஏற்படாமல் இருக்க, 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.இதில், நேற்று முன்தினம், 60 மீட்டர் நீளத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு தடுப்பை அடையாளம் தெரியாத மர்நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ