உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் செய்திகள்:செயின் பறிக்க முயன்ற இருவர் கைது

போலீஸ் செய்திகள்:செயின் பறிக்க முயன்ற இருவர் கைது

பொள்ளாச்சி அருகே, கோவிந்தாபுரம் ரோட்டில், 33 வயதுடைய பெண் ஒருவர், மொபைல்போனில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் சென்ற இருவர், அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்று, அங்கிருந்து தப்பினர். இச்சம்பவம், அங்குள்ள தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், சமூக வலைதளங்களில் பரவியது. ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கோவிந்தாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து, அவர்களிடம் விசாரிக்கையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் பகுதியைச் சேர்ந்த கோகுல்தாஸ், 26, மற்றும் அமல், 25, என்பதும், அவர்கள் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். நகை திருடியவர் கைது பொள்ளாச்சி, சங்கம்பாளையம் காலனியில் வசிப்பவர் சுஜிஅரவிந்தன். இவரது வீட்டில் முதியோர் உள்ள நிலையில், அவர்களின் உடல் நலத்தை பேணும் வகையில், ஆயுர்வேத சிகிச்சைக்கு உட்படுத்தியும் வருகிறார். இந்நிலையில், அவர்களிடம் இருந்த, 10 பவுன் நகை திருடு போனது. இதையடுத்து, அவர்கள் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை மேற்கொண்டதில், முதியோர் வீட்டில் ஆயுர்வேத டாக்டராக சிகிச்சை அளிந்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த ஜெயகுமாரிடம் விசாரித்தனர். அப்போது, அவர், நகை திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டில் 9 சவரன் நகை திருட்டு பொள்ளாச்சி - பல்லடம் ரோடு செல்லப்பன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி,47. இவர், இந்தியன் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். உடுமலையில் உள்ள மகளின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீடு திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த, ஒன்பது சவரன் நகை மாயமாகியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து, வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் தடயங்கள் உள்ளதா என கைரேகை பிரிவு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். விபத்தில் இருவர் காயம் கோவையை சேர்ந்தவர் ஸ்ரீராம், 31, தனியார் கம்பெனி ஊழியர். தனது நண்பர் ஜெயசொரூபாவுடன், பொள்ளாச்சி முள்ளுப்பாடி ரயில்வே பாலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களின் பின்னால் அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த பைக், எதிர்பாராத விதமாக ஸ்ரீராம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்தோர், காயமடைந்தவர்களை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ