| ADDED : ஜன 13, 2024 09:10 PM
கோவை:ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யா பவனில், 27வது பொங்கல் இசை விழா துவங்கியது.பாரதீய வித்யா பவன் பள்ளி மாணவர்களின் பஜனையுடன், விழா துவங்கியது. பொங்கல் இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இசை துறையில் பல சாதனைகள் புரிந்த இசை கலைஞர்களுக்கு பாரதீய வித்யா பவன் சார்பில், ஆண்டுதோறும் சங்கீத் சாம்ராட் மற்றும் கோவை சுப்ரி முருக கான ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டுக்கான சங்கீத் சாம்ராட் விருது, இசைத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல சாதனைகள் புரிந்து, தற்போது நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயற்சி அளித்துவரும் இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு வழங்கப்பட்டது.இதேபோல், கோவையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோவை சுப்ரி விருது, கர்நாடக இசை ஆசிரியை புவனேஸ்வரிக்கு வழங்கப்பட்டது.விருதுகளை, பாரதீய வித்யா பவன் கோவை மைய துணைத்தலைவர் நாகசுப்ரமணியம், பொருளாளர் அழகிரிசாமி, இணை செயலாளர் சூர்யநாராயண், நுண்கலை துறை இயக்குனர் உஷா உள்ளிட்டோர் வழங்கினர். விஷ்ணுதேவ், திருவனந்தபுரம் சம்பத், பிரசாத் மற்றும் ஸ்ரீஜித் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.