| ADDED : ஜன 04, 2024 10:34 PM
கோவை:தமிழக மக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகையையும் தொகுப்பையும் எந்த காரணத்தை முன்னிறுத்தியும் நிறுத்தக்கூடாது என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை : தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை. விவசாயத்துக்கு அடிப்படையானது. தமிழகமக்கள் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட,கடந்த பல ஆண்டுகளாக, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கம் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டது.வரஉள்ள பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தது 2,000 ரூபாயாவது வழங்க வேண்டும் என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.