உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அதிருப்தி கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம்

 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அதிருப்தி கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம்

பொள்ளாச்சி: 'கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளோம்,' என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில், கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 8,370 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 5,200 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்படுகிறது. ஒரே வேலைக்கு ஆசிரியர்களுக்கு வேறு, வேறு அடிப்படை ஊதியங்களை அரசு வழங்குவது பெரும் பிரச்னைக்கு உள்ளானது. இதை கண்டித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக, தி.மு.க. 311வது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நேரத்திலும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விரக்தியடைந்தஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், பேட்ஜ் அணிந்து பணி செய்தல், கோட்டை நோக்கிய பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது, தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். பொள்ளாச்சி தெற்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் வட்டாரச் செயலாளர் அருண்குமார் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய பிரச்னை கடந்த, 16 ஆண்டுகளாக தொடர்கிறது. அரசு பணியில் இருந்தும், இதுவரை ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தாத ஒரே துறை நாங்கள் தான். வேலைக்கு சேர மட்டும் தகுதித்தேர்வு, நியமனத்தேர்வு கேட்கும் அரசு, அதை முடித்த ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்குவதில்லை. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், சென்னையில் இன்று (26ம் தேதி) முதல் காலவரையற்ற சிறை நிரப்புதல், முற்றுகை, மறியல் என மூன்று வகை போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதில், தமிழகத்தில் இருந்து, 15,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ