தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அண்ணா நகரில் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு, அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெரு இணைப்பு ரோட்டில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். நடந்து செல்லும் மக்கள் இவ்வழியை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றனர். பல நாட்களாக மழை நீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமம் ஏற்படுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து, தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மழை நீர் தேங்காத படி, ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.