பள்ளி நேரத்தில் பஸ் இயக்க கோரிக்கை
வால்பாறை ; வால்பாறை நகரிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது நடுமலை எஸ்டேட். இங்கிருந்து, நகரில் உள்ள பள்ளி,கல்லுாரிக்கு நாள்தோறும், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நடந்து செல்கின்றனர். மழை காலங்களில், வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் மாணவர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாணவர்கள் கூறுகையில், 'வால்பாறை நகரிலிருந்து, காலை, மாலை நேரங்களில் கருமலை எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை, நடுமலை துண்டுக்கருப்பாரயர் சுவாமி கோவில் வழியாக இயக்க வேண்டும். நடுமலை வழியாக பஸ் இயக்குவதன் வாயிலாக, உள்ளூர் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்,' என்றனர்.